பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் இன்னுமொரு சிறப்பான செயல்பாட்டுடன் 2011-12 நிதியாண்டு நிறைவடைந்துள்ளது. 81,514.99 கோடி ரூபாய் முதல் வருட பிரிமிய வருமானத்துடன் ஆயுள் காப்பீட்டுத் துறை சந்தையில் எல்.ஐ.சி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது. 3.57 கோடி புதிய பாலிசிகளை எல்.ஐ.சி இந்த ஆண்டு விற்றுள்ளது. நான்கு பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும் ஒட்டு மொத்தமாக ரூபாய் 30,531.61 கோடி பிரிமிய வருமானம் ஈட்டி கடந்தாண்டை விட 21.39 % வளர்ச்சியை அடைந்துள்ளது.
எல்.ஐ.சி தனக்குத் தானே நிர்ணயம் செய்து கொண்ட இலக்கை அடைய முடியவில்லையே என்ற ஏமாற்றம் கூட உள்ளது. மிகவும் கடினமான சூழலில் எல்.ஐ.சி புரிந்துள்ள இந்த பாராட்டத்தக்க செயல்பாட்டை இதனால் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏமாற்றத்தின் நிழல் இந்த மகத்தான சாதனையை மறைத்து விட அனுமதிக்கக்கூடாது.
தேசத்தின் பொருளாதாரத் தன்மைக்கு மாறாக இன்சூரன்ஸ்துறையின் செயல்பாடு மட்டும் தனித்து இருக்க முடியாது. இந்த இரண்டிற்குமான வலுவான தொடர்பு நிரூபிக்கப்பட்ட ஒன்று. சமீப காலங்களிலேயே 2011-12 நிதியாண்டுதான் இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகவும் மோசமான ஆண்டு. சர்வதேச நிதி நெருக்கடியினாலும் நவீன தாராளமயமாக்கல் பாதையை தொடர்ந்து பின்பற்றியதாலும் இந்தியப் பொருளாதாரம் தடம் புரண்டது.
வங்கி வைப்புத் தொகை திரட்டலுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 17 % இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பது பற்றி ரிசர்வ் வங்கி கவலை கொண்டுள்ளது. தொழில் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தி ஆகியவற்றில் எதிர்மறை வளர்ச்சியைக் கொண்டுள்ள பொருளாதாரத்தில் புதிய வேலைகளை உருவாக்க முடியவில்லை. இந்தியப் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலைமையின் பின்னணியில்தான் நாம் எல்.ஐ.சி யின் செயல்பாட்டை நாம் பார்க்க வேண்டும்.
தனியார்துறையை விட எல்.ஐ.சியின் செயல்பாடு மிக மிகச் சிறப்பானது.மிகவும் முன்னேறியது. கடந்தாண்டு இன்சூரன்ஸ் சந்தையில் பிரிமிய வருமானத்தின் அடிப்படையில் 68.7 % என்றிருந்த எல்.ஐ.சி யின் பங்கு இப்போது 71.35 % ஆக உயர்ந்துள்ளது. அதே போல பாலிசிகள் அடிப்படையில் 76.91 % என்றிருந்த எல்.ஐ.சி யின் பங்கு இப்போது 80.89 % ஆக உயர்ந்துள்ளது.
2011- 12 ம் ஆண்டில் எஸ்.பி.ஐ லைப், பிரிமிய வருமானத்தில் 5.71 % மும் பாலிசிகள் எண்ணிக்கையில் 1.99 % மும் பெற்று ஐ.சி.ஐ.சி புருடென்ஷியலை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு வந்தாலும் எல்.ஐ.சி யை ஒப்பிடுகையில் எங்கோ வெகு தூரத்தில் உள்ளது. எல்.ஐ.சி பிரிமிய வருமானத்தில் 5.7 % எதிர்மறை வளர்ச்சியும் பாலிசிகள் எண்ணிக்கையில் 3.47 % எதிர்மறை வளர்ச்சியும் பெற்றுள்ளது என்பது உண்மைதான். இருப்பினும் தனியார் நிறுவனங்களை ஒப்பிடுகையில் எல்.ஐ.சி யின் செயல்பாடு எவ்வளவோ உயர்வானது. தனியார் நிறுவங்களின் பிரிமிய வருமானத்தில் 16.91 % வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பாலிசிகள் எண்ணிக்கையில் 24.05 % சரிவு நிகழ்ந்துள்ளது. மிகப் பெரிய தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் பிரிமிய வருவாயில் 35.39 % மும் பாலிசிகள் எண்ணிக்கையில் 23.81 % மும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஒட்டு மொத்தமாக அனைத்து தனியார் கம்பெனிகளும் சேர்ந்து பிரிமிய வருவாயில் 28.64 % சந்தைப் பங்கும் பாலிசிகள் எண்ணிக்கையில் 19.1 % சந்தைப் பங்கும் வைத்துள்ளனர். இந்தப் புள்ளி விபரங்கள் சில சுவாரஸ்யமான உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. பிரிமிய வருவாயை விட பாலிசிகள் எண்ணிக்கையில் எல்.ஐ.சி யின் பங்கு கூடுதலாக உள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்களிலோ இதற்கு முற்றிலும் மாறான நிலை உள்ளது. பிரிமிய வருவாயில் 28.64 % சதவிகித சந்தையை வைத்துள்ள தனியார் பாலிசிகள் எண்ணிக்கையில் வெறும் 19.1 % மட்டுமே வைத்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் செல்வந்தர்களையும் வசதி படைத்தவர்களையும் மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர் என்பதை இது தெளிவாக எடுத்துரைக்கிறது. இதன் மூலம் இன்சூரன்ஸ்துறை தாராளமயக்கல், ஏன் பொருளாதாரத்தின் எந்தப் பகுதியின் சீர்திருத்தமும் ஏழைகளுக்காகவும் நலிவடைந்த மக்களுக்காகவுமே செய்யப்படுகின்றது என்ற வாதம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டு விட்டது.
மத்தியரசின் கொள்கைகளும் ஐ.ஆர்.டி.ஏ வின் தேவையற்ற தலையீடுகளும் கூட இன்சூரன்ஸ்துறையின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. பொருளாதாரத்தில் முதலீடு செய்ய தேவைப்படுகின்ற நீண்ட கால சேமிப்புக்களை ஆயுள் இன்சூரன்ஸ் திரட்டுகின்றது. இந்த தனித்த ஒரு அம்சத்தினாலேயே வருமான வரி விதிப்பில் ஆயுள் காப்பீட்டிற்கு பிரத்யேக முன்னுரிமை தர வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அரசின் வரிக் கொள்கை முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற தனையை உருவாக்கி வணிகத்தை பாதித்து விட்டது.
பங்குச்சந்தைக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அரசு ஆயுள் காப்பீட்டில் சேமிப்பதை ஊக்கப்படுத்தலாம். சிங்கிள் பிரிமியம் பாலிசிகள் மீதான ஐ.ஆர்.டி.ஏ வின் நிலை, வணிகத்தை கடுமையாக பாதித்துள்ளது. புதிய பாலிசி திட்டங்களூக்கு ஒப்புதல் வழங்குவதில் நிலவும் கால தாமதமும் இன்சூரன்ஸ்துறையை பாதித்துள்ளது. கட்டுப்பாடுகள் என்பது துறையினை முறைப்படுத்தி வளர்த்தெடுக்க பயன்பட வேண்டும். ஆனால் இங்கேயே வளர்ச்சியை முடக்கத்தான் அவை பயன்படுகின்றன.
நான்கு பொதுதுறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும் ஒட்டு மொத்தமாக ரூபாய் 30,531.61 கோடி ரூபாய் பிரிமிய வருமானம் ஈட்டி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளன. 2011-12 ம் ஆண்டில் 21.39 % வளர்ச்சி அடைந்துள்ளது இது நாள் வரை காணாத அற்புதம். பொருளாதாரம் மந்த கதியில் உள்ள போதும், வணிகம் மந்தமாக உள்ள போதும் பெற்றுள்ள இந்த வளர்ச்சி மகத்தானது.
58.46 % த்துடன் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் சந்தையில் தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது. இந்த அபாரமான செயல்பாடு துறை மேலும் வளர்ச்சி பெறுவதற்கான புதிய வாய்ப்புக்களை தோற்றுவித்துள்ளது.
4
அரசு இந்த உண்மையை உணர்ந்து கொண்டு, இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா 2008 ன் மூலம் இந்த நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாற்றப் பட்டுள்ள நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சிகள் உடனடியாக கைவிடப் படவேண்டும். இந்நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்திற்கும், தனது சமூகப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதுமான தனது கடமைகளை நிறைவேற்ற அனைத்து வழிகளிலும் உற்சாகப்படுத்த வேண்டும்.
பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாடு என்பது மிகவும் கடினமான, சோதனைக் காலத்தில் நிகழ்ந்துள்ள ஒரு வெற்றி வரலாறு. எனவே சுணக்கமாகவோ, ஏமாற்றமாகவோ இருப்பதற்கான இடமே கிடையாது. அனைத்துத் தரப்பு ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வால் இந்த வெற்றியை பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சாதித்துள்ளது. ஊழியர்கள் தங்கள் சேவைத்திறனை மட்டும் வளர்க்கவில்லை, வணிகத்திற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கவும் உதவி உள்ளனர்.
நவீன தாராளமயமாகலின் தாக்குதல்களிலிருந்து இந்த உன்னதமான நிறுவனங்களை பாதுகாக்கவும் அவற்றை மேலும் புதிய உயரங்களுக்கு எடுத்துச்செல்லவும் இந்த சிறப்பான பணி தொடர வேண்டும். தற்போதைய சூழலில் நம் முன் உள்ள மிக முக்கியமான கடமை இது.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒப்பம் ... கே.வேணுகோபால்
பொதுச்செயலாளர்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சுற்றறிக்கையின்
தமிழாக்கம்