காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம், பதிவு எண் 640/ என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 01/12 02.01.2012
அனைத்து உறுப்பினர்களுக்கும்,
அன்பார்ந்த தோழரே,
‘தானே’ புயலால் கண்ணீரில் தத்தளிக்கும் கடலூர், புதுவை,
வீடுகள், உடமைகளை இழந்த உழைப்பாளி மக்கள்,
உதவிக் கரம் நீட்டுவது நமது கடமை.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக கடலின் சீற்றம் சுனாமி பேரலையாய் தென் தமிழகம் முழுவதையும் 26.12.2004 அன்று நிலை குலையச்செய்தது. அன்றைய ஆழிப்பேரலையை விட மிக மோசமான தாக்குதலாக 30.12.2011 அன்று வீசிய ‘தானே’ புயல் அமைந்து விட்டது.
மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் ஏராளம். ஆயிரக்கணக்கான மரங்களும், உயர் மின் அழுத்த கம்பங்கள் உட்பட ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள், செல்போன் கோபுரங்கள் என வேகமான காற்றின் முன்னே நிற்க முடியாமல் தகர்ந்து போய் விட்டன. நடுத்தர மக்களின் வீடுகள் பலவும் பல விதமான பாதிப்புக்களை சந்தித்துள்ளது. ஜன்னல்கள், கதவுகள், மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகள் என்று பலவும் நாசமாகியுள்ளன. நமது பல தோழர்களின் வீடுகள் கூட இந்த ‘தானே’ புயலில் பாதிக்கப்பட்டுள்ளன.
நெய்வேலியில் உள்ள ஊழியர் குடியிருப்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நமது அலுவலகங்களும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. கடலூர் போன்ற அலுவலகங்களில் இயல்பான பணிகளைத் துவக்குவதில் சிரமங்கள் உள்ளன. தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரத்தை வழங்கும் நெய்வேலி நகரே இருளில் மூழ்கியுள்ளது என்றால் மற்ற பகுதிகளின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை கற்பனை கூட செய்திட முடியவில்லை.
பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் அரசு சொத்துக்களும், தனியார் உடமைகளும் நாசமாகியுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழிந்து போயுள்ளன. இந்த மோசமான பேரழிவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது ஏழை உழைப்பாளி மக்கள்தான். குடிசைகளையும் அதில் இருந்த சொற்ப உடமைகளையும் இழந்து அகதிகளாய் தவிக்கிறார்கள்.
புயல் உருவாக்கிய பாதிப்புக்களால் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரமும் பறி போயுள்ளது. உழைக்க தயாராக இருந்தும் வேலை செய்யும் வாய்ப்புக்கள் இல்லாமல் போய் விட்டது.
துயரில் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக உதவுவது என்ற சிறந்த மரபை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நமக்கு பயிற்றுவித்துள்ளது. சுனாமி நிவாரணப்பணி தொடங்கி சமீபத்திய அரியாகுஞ்சூர் பழங்குடி இன மக்கள் வரை நமது தோழர்களின் பங்களிப்பு மகத்தானது. இதோ மீண்டும் காலமும் தேவையும் நம்மை அழைக்கிறது. நாம் மீண்டும் மக்களுக்காக களம் இறங்கும் அவசியம் உருவாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் மற்றும் புதுவையில் பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு உதவ உங்களால் இயன்ற நிதியை தாராளமாக அள்ளித் தாரீர் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தொலைக்காட்சியிலும் நாளிதழ்களிலும் சேதங்களின் அளவைப் பார்த்து கலங்கியவர்கள் நாம். நம் நெஞ்சின் ஈரம் வெளிப்படும் வண்ணம் உடனடியாய் உதவிட முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
காலத்தே செய்யும் உதவியின் முக்கியத்துவம் அறிந்தவர்கள் நாம். பொங்கல் விழாவிற்கு முன்பு நமது உதவிகள் உரியவர்களை சென்றடைய ஒவ்வொரு தோழரும் தங்களால் இயன்ற நிதியினை உடன் கிளைச்சங்கப் பொறுப்பாளர்களிடம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
எஸ். ராமன்
பொதுச்செயலாளர்
No comments:
Post a Comment