உலகமய எதிர்ப்புப் போராளிக்கு செவ்வணக்கம்
வெனிசுலா
நாட்டின் ஜனாதிபதி தோழர் ஹூயுகோ சாவேஸ் அவர்களின் மறைவிற்கு காப்பீட்டுக் கழக
ஊழியர் சங்கம் தனது ஆழ்ந்த வருத்தத்தை உரித்தாக்குகிறது.
எண்ணெய்
வளம் மிக்கது வெனிசுலா நாடு. ஆனால் அவை
யாவும் அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகள் வசம் இருந்து வெனிசுலா மக்களை வறுமையில்
தவிக்க வைத்தது. சோஷலிசக் கட்சியின் சார்பில் ஜனாதிபதியான தோழர் ஹூயூகோ சாவேஸ்
அவற்றையெல்லாம் தேச உடமையாக்கினார். எண்ணெய் வளம் மூலம் கிடைத்த நிதி மக்கள் நலத்
திடடங்களுக்காக செலவிடப்பட்டது. காத்ரீனா புயலில் தாக்கப்பட்ட அமெரிக்க ஏழை
மக்களுக்கு குறைந்த விலையில் எண்ணெய் அனுப்பப் பட்டது.
பொறுக்காத
அமெரிக்க ஏகாதிபத்தியம் ராணுவக் கலகம் மூலம் சாவேஸ் ஆட்சியை கவிழ்த்து பொம்மை
அதிபராய் ஒரு முதலாளியைக் கொண்டு வந்தது. ஆனால் வெனிசுலா மக்கள் வெகுண்டெழுந்தனர்.
சாவேஸின் ஆட்சி மீண்டும் தொடர வழி வகுத்தனர்,
நிகரகுவா,
பொலிவியா, சிலி, ஈக்வடார், உருகுவே, பிரேசில் என லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றின்
பின் ஒன்றாக சோஷலிஸ ஆட்சியை கண்டது என்றால் அதற்கு உந்து சக்தியாக இருந்தது சாவேஸ்
என்றால் அது மிகையில்லை. உண்மையான புரட்சித் தலைவர் கியூபாவின் பிடல்
காஸ்ட்ரோ வழிகாட்டுதலில் அவரது புரட்சிப்
பயணம் தொடர்ந்தது. மீண்டும் மீண்டும் வெனிசுலா மக்கள் அவரை தங்கள் ஜனாதிபதியாக
தேர்வு செய்தனர்.
அமெரிக்க
ஏகாதிபத்தியத்திற்கு அச்சுறுத்தலாய் இருந்தவர், சாத்தானின் துப்பாக்கியின் கந்தக
நாற்றம் இன்னும் நீடிக்கிறது என ஜார்ஜ் புஷ்ஷை ஐ.நா சபையில் நேரடியாக சாடியவர்,
பாலஸ்தீனத்தின் மீது முற்றுகை நிகழ்த்திய இஸ்ரேல் நாட்டின் தூதரை தனது
நாட்டிலிருந்து வெளியேற்றியவர், உலக வங்கிக்கு மாற்றாக லத்தீன் அமெரிக்க வங்கி
ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர், ஒரு புதிய கூட்டமைப்பை ஏற்படுத்தியவர்.
உலகமயமாக்கலுக்கு
மாற்று கிடையாது என பலர் கொக்கரித்த வேளையிலே, சோஷலிச மாற்றம் சாத்தியமே என்பதை
நிரூபித்தவர் ஹூயூகோ சாவேஸ். அவர் மறைந்தாலும் அவர் என்றென்றும் உலக மக்களின்
மனதில் நீடித்து நிலைத்திருப்பார்.
தோழர் ஹூயூகோ சாவேஸ் அவர்களுக்கு செவ்வணக்கம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்
வேலூர் கோட்டம்
No comments:
Post a Comment