Wednesday, December 28, 2011

ICEU, VELLORE DIVISION WISHES EVERY ONE A HAPPY NEW YEAR

காப்பீட்டுக்  கழக  ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம், பதிவு எண் 640 / என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 63 / 11                                                                                    28.12.2011
அனைத்து உறுப்பினர்களுக்கும்,
அன்பார்ந்த தோழரே,

புத்தாண்டை வரவேற்போம், புதிய சாதனைகள் படைத்திடுவோம்

2011 ம் ஆண்டின் நிறைவுப் பகுதியில் இருக்கிறோம். கடிகார முட்கள் வேகமாய் நகர, நகர, இதோ புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.


தற்போதைய ஆண்டு நிறைவடையும் வேளையில் கண நேரம் சற்று திரும்பிப் பார்த்தால் பல்வேறு சாதனைகளின் ஆண்டாக 2011 ஆண்டு அமைந்தது என்பதை நாம் பெருமிதத்துடன் பார்க்க முடியும். இன்சூரன்ஸ் ஊழியர்களின் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தனது வைர விழா ஆண்டை நிறைவு செய்தது இந்த ஆண்டில்தான். 


நமது நீண்ட, நெடிய, உறுதியான போராட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்றது இந்த ஆண்டில்தான். பல்லாண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றி வந்த ஊழியர்களின் வாழ்வில் வசந்தமாக பணி நியமனம் வந்தது. சில அழிவு சக்திகளின் சூழ்ச்சிகள் அமுலாக்கத்தை தாமதம் செய்தாலும்  புத்தாண்டில் அவர்களுக்கு விடியல் கிடைக்கும் என்பது உறுதி.


உலகமயச் சேற்றில் சிக்கிக் கொண்ட மத்தியரசு, அந்த புதைகுழியில் அமெரிக்கா உள்ளிட்ட பெரும் முதலாளித்துவ நாடுகளே மாட்டிக் கொண்டு தவிப்பதை கண்ணுற்றும் அறிவற்ற மூடர்களாய் இந்தியாவையும் அதிலே தள்ளி விட முயற்சிக்கிறார்கள்.


இத்தகைய மோசமான சூழலிலும் நம்முடைய நிறுவனம் எல்.ஐ.சி யை தனியார் வசம் தாரை வார்க்க செய்த சதிகளெல்லாம் முறியடிக்கப்பட்டது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஆணித்தரமான வாதங்களை ஏற்றுக் கொண்ட நாடாளுமன்ற நிதியமைச்சகத்தின் நிலைக்குழு, எல்.ஐ.சி நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகவே தொடர வேண்டும், அரசு உத்தரவாதம் தொடர வேண்டும் என்று பரிந்துரை வழங்கியது. அந்தப் பரிந்துரைகளை மத்தியரசும் நாடாளுமன்றமும் ஏற்றுக் கொண்டது என்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுதியான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி, நம் ஒவ்வொருவரையும்  பெருமிதம் கொள்ள வைத்த வெற்றி.


ஆனால் ஆபத்து முற்றிலுமாக நீங்கிடவில்லை. இன்சூரன்ஸ்துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று பரிந்துரை அளித்துள்ள நிதியமைச்சக நிலைக்குழு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை விற்கலாம் என்று சொல்லியிருப்பது அபாயகரமானது, அதனை முறியடிக்க வேண்டிய தலையாய கடமை வரும் ஆண்டில் நமக்கு உள்ளது.


உலகெங்கும் உள்ள உழைப்பாளி மக்கள் உலகமயக் கொள்கைகளுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை தொடுத்துள்ளனர். வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்  என்று அமெரிக்காவில் தொடங்கிய போராட்டம் உலகெங்கும் விரிவடைந்துள்ளது.   இங்கிலாந்து,  பிரான்ஸ்,  கிரீஸ்  ஸ்பெய்ன்,  போர்ச்சுகல்,
இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகள் தொழிலாளர்களின் வீரம் செறிந்த வேலை நிறுத்தப் போராட்டங்களால் அதிர்ந்து போயுள்ளது.


அந்தப் போராட்டத்தின் பகுதியாக இந்தியாவின் தொழிற்சங்க இயக்கங்கள் தொடர்ந்து கூட்டுப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. நாடாளுமன்றம் நோக்கிய பேரணி, சிறை நிரப்பும் போராட்டங்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியாய் வரும் 28.02.2012 அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தோழர்கள் உள்ளிட்ட  கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ள இப்போராட்டம் மத்தியரசின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாய் அமைந்திடும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கச் சுற்றறிக்கை கூறியுள்ளது போல வரும் புத்தாண்டு உழைப்பாளி மக்களின் ஆண்டாகவே அமையவுள்ளது.


வேலூர் கோட்டத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டும் இயக்கங்களின் ஆண்டாகவே நிறைவுற்றுள்ளது. வரலாறு படைத்த ஐந்தாவது தமிழ் மாநில மகளிர் மாநாடு, எழுச்சி மிக்க சிதம்பரம் மாநாடு, கிளைகள் தோறும் தொழிற்சங்க வகுப்புக்கள், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வைர விழா நிறைவு விழாக்கள், முகவர்களுக்கான புது வணிகப் போட்டிகள், சங்க நிகழ்வுகள் குறித்த புத்தக வெளியீடு, சர்வதேச மகளிர் தின சமூக நல உதவிகள், கையெழுத்து இயக்கம், இன்சூரன்ஸ்துறை பாதுகாப்பு இயக்கங்கள், அர்த்தம் மிக்க பயனுள்ள பல கருத்தரங்குகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் இயக்கங்களில் பங்கேற்பு என  சென்ற ஆண்டு முழுதுமே நாம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.


மாநில மகளிர் மாநாட்டோடு சிறப்பாக துவங்கிய ஆண்டு நெகிழ்ச்சியாகவே நிறைவு பெறுகின்றது, தேர்தல் தோல்வியிலே ஆத்திரமுற்ற நில உடமையாளரின்  கோரச்செயலால் வீடிழந்த பழங்குடி இன மக்களுக்கு வேலூர் கோட்டத் தோழர்கள் அள்ளித் தந்த நிதி கொண்டு உதவிகள் செய்த இயக்கத்தோடு நிறைவு பெறுகின்றது.


இந்த ஆண்டின் வெற்றிகள் வரும் ஆண்டின் இயக்கங்களுக்கான அடித்தளம். மேலும் வேலூர் கோட்டத்தைப் பொறுத்தவரை 2012 ம் ஆண்டும் மிக மிக முக்கியமானது. 12.06.1988 அன்று உதயமான வேலூர் கோட்டச் சங்கம் வரும் ஆண்டிலேதான் தனது வெள்ளி விழா ஆண்டிலே அடியெடுத்து வைக்கவுள்ளது.


இந்த வரலாற்று நிகழ்வை நாம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மரபிற்கேற்ப வெகு சிறப்பாக கொண்டாடவுள்ளோம். ஒரு நாள் நிகழ்வாக இல்லாமல், ஆண்டு முழுவதும், கோட்டம் முழுவதும் பல்வேறு இயக்கங்கள் நடத்த திட்டமிட்டு வருகின்றோம். நமது கோட்டத்தை மேலும் வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளோடு வெள்ளி விழாவை சிறப்புறக் கொண்டாடுவோம்.


தேசியமயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ்துறையை பாதுகாக்க, இன்சூரன்ஸ் ஊழியர் நலன்களை  மேலும் முன்னேற்ற, உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான விடியலுக்காக, உலகமயக் கொள்கைகளை முற்றிலுமாக வீழ்த்திட புத்தாண்டில் போராட்ட களம் காண்போம், புதிய சாதனைகள் படைத்திடுவோம்.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒம் . . .எஸ்.ராமன்  
பொதுச்செயலாளர்

No comments:

Blog Archive