17.06.2012 is the Death Anniversary of Com Saroj Chaudhri,
the Great Leader of All India Insurance Employees'
Association.
In his memory, We herein below give the Tamil Version of
the Last Speech made by Com Saroj in the 17th General
Conference of A.I.I.E.A held at Hyderabad in 1998.
Let us uphold the principles of Com Saroj and
continue to travel in his path.
Red Salute Com Saroj
the Great Leader of All India Insurance Employees'
Association.
In his memory, We herein below give the Tamil Version of
the Last Speech made by Com Saroj in the 17th General
Conference of A.I.I.E.A held at Hyderabad in 1998.
Let us uphold the principles of Com Saroj and
continue to travel in his path.
Red Salute Com Saroj
இறுதியாய் நிகழ்த்திய எழுச்சி உரை
17.06.2012 அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களின் நினைவு நாள். அவரது நினைவைப் போற்றுகின்ற முறையில் 1998 ம் ஆண்டில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பதினேழு பொது மாநாட்டில் அவர் ஆற்றிய உரையை கீழே தமிழில் அளித்துள்ளோம். தோழர் சரோஜ் அவர்கள் ஆற்றிய இறுதி உரையும் இதுதான். என்றென்றைக்கும் நமக்கு வழி காட்டுகின்ற, எழுச்சி அளிக்கிற உரையாக இந்த உரை அமைந்திருக்கிறது என்பதே தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களின் சிறப்பம்சம். தோழர் சரோஜ் அவர்களின் பொருளாதாரம் குறித்த ஆழ்ந்த ஞானம், வரலாற்றின் மீதான ஈடுபாடு, இலக்கிய ஆர்வம், உழைப்பாளி மக்கள் மீதான நேசம், நம்பிக்கை, இன்றைய கலை வடிவங்கள் மீதான விமர்சனப் பார்வை, சமூகத்தின் மீதான அக்கறை, இளைய தலைமுறைக்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை கோபமும் நகைச்சுவையும் அடங்கிய இந்த உரை வெளிப்படுத்தியுள்ளது
தோழர் சரோஜ் அவர்களுக்கு செவ்வணக்கம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இம்மாநாட்டின் தலைவர் அவர்களே, பிரதிநிதித்தோழர்களே, பார்வையாளர் தோழர்களே, இம்மாநாட்டில் பங்கேற்கக் கூடிய நிலையில் இருந்து உங்களோடு சில வார்த்தைகள் பேசுவதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாநாட்டில் பங்கேற்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன், ஏனென்றால் இந்த நூற்றாண்டின் இறுதி மாநாடு இதுதான். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், பம்பாய் நகரிலிருந்து 1951 ல் தனது பயணத்தைத் துவக்கியது.
1951 ல் நடைபெற்ற அமைப்பு மற்றும் முதலாவது மாநாட்டில் நான் பங்கேற்கவில்லை. இரண்டாவது மாநாடு தொடங்கி இந்தோர் மாநாடு தவிர மற்ற அனைத்து மாநாடுகளிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். பம்பாயில் நடைபெற்ற முதலாவது மாநாட்டிற்குப் பின்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உதயமான பின்பு நான் அந்த இடத்தைச் சென்று பார்த்தேன். கோகினூர் 3 மில்லுக்குப் பக்கத்தில் ராம் மாருதி சாலை மும்பை என்பது என் நினைவில் உள்ளது. தோழர் தேவ் நான் சொன்னது சரிதான் என ஏற்றுக் கொள்வார். தேசம் விடுதலை பெற்று நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு 1951 ல் நமது பயணம் துவங்கியது.
நாம் இப்போதும் 1998 ல் உள்ளோம். இந்த நூற்றாண்டின் இறுதி ஆண்டான 1999 நமது கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் பதினான்கு மாதங்களில் நாம் இருபத்தியோராம் நூற்றாண்டைக காணப்போகிறோம். முற்றிலும் புதிய நூற்றான்டு இது. எனவேதான் இம்மாநாட்டில் பங்கேற்க நான் ஆர்வமாக இருந்தேன்.
1996 மதுரை மாநாட்டில் தோழர் சுனில் அவர்களின் மறைவால் ஏற்பட்ட சோகத்தின் நிழல் படிந்திருந்தது. தென் மத்திய மண்டலம் மற்றும் ஹைதராபாத் கோட்டத்தில் நம் அமைப்பை பலப்படுத்துவதில் முக்கியப் பாத்திரம் வகித்த தோழர் சுகுனாகர்ராவ் அவர்கள் பற்றிய சோகமான நினைவுகளைத் தாங்கியே இம்மாநாடு நடைபெறுகின்றது. ஆனாலும் கூட இந்த விஷயங்களை நாம் வாழ்வில் ஏற்றுக்கொண்டுதான் தீர வேண்டும். எதுவும் செய்ய இயலாது. வாழ்வின் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வது போல இறப்பின் யதார்த்ததையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான தோழர் சந்திரசேகர் போஸ், இம்மாநாட்டில் பங்கேற்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். அவர் நீண்ட, மகிழ்ச்சியான, ஆயுள் பெற வேண்டும் என என்னோடு வாழ்த்து சொல்ல இம்மாநாடு முழுமையும் இணையும் என்று நம்புகின்றேன். அறிக்கையில் என்னவெல்லாம் சொல்லப்பட்டுள்ளதோ அதையே நான் மீண்டும் சொல்லப்போவதில்லை. அறிக்கையின் உயர் தரத்தை நீங்கள் முன்னரே பார்த்து விட்டீர்கள்.
ஆழமான அறிவும் ஞானமும் உடைய திறமையான ஒரு தோழர் என்னைத் தொடர்ந்து பொறுப்பேற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது. அவரது ஆற்றல், பிரச்சினைகளை அணுகுவது, தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொள்வது, விஷயங்களை முன்வைக்கும் பாங்கு, ஆகியவை நிறைவைத்தருகின்றது. அவர் தனக்கு மட்டுமல்லாமல் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கே பெருமை தேடித்தந்துள்ளார். தனியார்மய எதிர்ப்புப் போராட்டம், அது ஏ.ஐ.ஐ,.இ.ஏ வால் மட்டுமே சாத்தியம். எனக்கு அடுத்து பொறுப்பேற்ற தோழர் அனைத்து வகையிலும் என்னை விஞ்சுவது எனக்கு மிக மிக மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் சிறிது காலம் கூட இந்த அமைப்பிலேயே தொடர்ந்திருந்தக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்தியாவின் அரசியல் நிலைமை பற்றி அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகள் முன்பாக சோவியத் யூனியன் வீழ்ந்த போது, சரியாக சொல்ல வேண்டுமென்றால் முன்னாள் சோவியத் யூனியன், ஏனென்றால் அது சிதறுண்டு போய்விட்டது, சோஷலிஸம் மறைந்து விட்டது, போய் விட்டது என்றெல்லாம் சொன்னார்கள். உங்களில் சிலர் ப்ரதெரின்ஸ்கி எழுதிய பிரபலமான “ஒரு மகத்தான தோல்வி – இருபதாம் நூற்றாண்டில் சோஷலிஸத்தின் தோற்றமும் மறைவும்” புத்தகத்தை படித்திருப்பீர்கள்.
“அதிலே சோஷலிஸம் முற்றிலுமாக வீழ்ந்து விட்டது. துரதிர்ஷடவசமாக அது வீழ எழுபது ஆண்டுகளாகி விட்டது” எனது கேள்வி என்னவென்றால், மனித குலம் தோன்றி 5000 வருடங்களாகி விட்டது. 5000 ஆண்டுகளோடு 70 ஆண்டுகளை ஒப்பிட்டால் அது எப்படி சரியாக இருக்கும். எதுவும் நிரூபிக்கப் படவில்லை. எதுவும் நிராகரிக்கப்படவில்லை.
நேற்று ஒரு தோழர் ஃபுகியாமா பற்றி பேசினார். அவர் ஃபுகியாமா பற்றியும் அவரது எழுத்துக்களையும் படித்திருப்பார் என்று நம்புகிறேன். சோவியத் யூனியன் சிதைவுண்ட போது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிதறுண்ட போது, சோவியத் யூனியனின் பல மாநிலங்கள் தங்களை சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்தி, அவை சி.ஐ.எஸ் ( Common Wealth of Independent States ) என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்ட போது ஃபுகியாமா, பரவசத்தின் உச்சத்தில் இருந்தார். வரலாறு இங்கே முடிந்து போய் விட்டது என அறிவிக்கிறார்.
இதற்கு மேல் வரலாறே கிடையாது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? “முன்னே பார்ப்பதற்கு, முன்னோக்கிச் செல்வதற்கு, இனியும் வாழ்வதற்கு, எந்த வித கோட்பாட்டிற்கும் வாய்ப்பே கிடையாது. வரலாறு இனி முன்னோக்கிச் செல்லாது. இயக்கம் நின்று விட்டது என்றுதான் பொருள். இதுதான் ஃபுகியாமா சொன்னதின் அர்த்தம். இப்போது அவர் என்ன உணர்ந்து கொண்டிருப்பார் என எனக்கு தெரியாது. அவரது வார்த்தைகளை அவரே திரும்பப் பெற வேண்டும்.
இன்று அவரது வார்த்தைகள் முற்றிலும் தவறு என நிரூபிக்கப்பட்டது. சோவியத் யூனியனின் சிதைவிற்குப் பின்பு ஏகாதிபத்திய சக்திகள், அதிலும் குறிப்பாக அமெரிக்கா, புதிய உலக ஒழுங்கை உருவாக்க விரும்புவதாக சொல்லப்பட்டது. இன்று புதிய உலக ஒழுங்கீனம்தான் ஏற்பட்டுள்ளது. இன்று குழப்பம், மோதல், நாடுகளுக்கிடையே மோதல், நாடுகளுக்குள்ளே மோதல், போர்கள் என்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகம் இதுவரை காணாத அநீதி, இதுவரை காணாத கொடூரம் என்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகம் இப்படிப்பட்ட சமத்துவமின்மையை இது நாள் வரை கண்டதில்லை.
எப்படியெல்லாம் சமத்துவமின்மை நிலவுகிறது என்பதெல்லாம் அறிக்கை விரிவாகவே விளக்கியுள்ளது. வீட்டிற்கு திரும்பிய பின்பும் தோழர்கள் அறிக்கையை கவனமாக படிப்பார்கள் என்று நம்புகிறேன். அறிக்கையை மாநாட்டின் நினைவுச் சின்னமாக வைத்திருக்காதீர்கள். தயவு செய்து அதை மீண்டும் ஒரு முறை படியுங்கள். பக்கம் 31 லிருந்து சில வரிகளை கூறும் ஆவலை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.
“ உலகில் உள்ள மக்கள் தொகையில் மிகப் பெரும் பணக்கார நாடுகளில் உள்ள 20 % பேர், ஒட்டு மொத்த நுகர்வோர் செலவினத்தில் 86 % ஐ செய்கின்றனர். ஆனால் 20 % ஏழை மக்கள் செய்யும் செலவினமோ வெறும் 1.3 % தான்”. இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். வறுமையின் அளவையும், எந்த அளவிற்கு பாகுபாடும், வேற்றுமையும் சுரண்டலும் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள மக்கட்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியாக உள்ள பணக்காரர்கள், மாமிசம் மற்றும் மீனில் 45 % ஐ உண்கிறார்கள். ஏழைகளாக உள்ள ஐந்தில் ஒரு பகுதியினருக்கோ 5 % மட்டுமே கிடைக்கிறது. 58 % மின்சார சக்தியை பணக்காரர்களே பயன்படுத்த ஏழைகள் பயன்படுத்துவதோ 4 % க்கும் குறைவு. செல்வந்தர்கள் 74 % தொலைபேசி இணைப்புக்களை பயன்படுத்தினால் ஏழை மக்களுக்கோ 1.1 % தான். இதுதான் துயரத்தின் அளவு, பாகுபாட்டின் அளவு. ஏழை நாடுகள், மூன்றாம் உலக நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி என ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் முன்பு காலனியாக இருந்த நாடுகள் என எல்லா நாடுகளுமே இன்று சுரண்டப்படுகின்றன. அவைகளின் இயற்கை வளங்கள் அளவில்லாமல் சுரண்டப்படுகின்றன. எல்லா வழிகளிலும் அவை சமத்துவமற்ற சூழலில் சிக்கித் தவிக்கும்படியாக செய்யப்படுகின்றன.
இதைத்தான் விரும்புகின்றார் ஃபுகியாமா. அவரும் அவரைப் போன்ற பேர்வழிகளும் போதிக்க விரும்புவது இதைத்தான். “ இந்த புதிய ஒழுங்கற்ற உலக அமைப்பு தொடரட்டும். நீ முன்னே செல்வதற்கு எதுவும் இல்லை என்பதால் கோபப்படாதே, போராடாதே, போராடுவதற்கு எதுவுமில்லை, நம்பிக்கை வைப்பதற்கு எதுவும் இல்லை, சாதிப்பதற்கு இனி எதுவும் இல்லை. ஏனென்றால் உலகம் இங்கேயே நின்று போய் விட்டது.” நம்பிக்கையின்மையிலும் துயரத்திலும் உலகில் உள்ள மக்கள் அப்படியே மூழ்கிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக போராடுவதைத்தவிர நமக்கு வேறு முக்கியமான கடமை எதுவும் நமக்கில்லை. இந்த அமைப்பு முறை, பெரும்பான்மையாக இருக்கிற மக்களை புறம் தள்ளி, அதிகாரம், செல்வம், வசதிகள் ஆகிய அனைத்தையும் அவர்களுக்கு மறுக்கிற, இது அவர்களின் தலை விதி என்று வர்ணிக்கிற அழுகிப் போன அமைப்பு முறை. இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் ஃபுகியாமா வகையறாக்கள் நம்மை வலியுறுத்துகின்றனர்.
அதிர்ஷ்டவசமாக நமக்கு இதிலே ஒரு முறிப்பு ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் தென்படுகின்றன. அதன் ஓசையைக் காற்றில் கேட்க முடிகிறது. மாற்றம் நாளையே மாற்றம் நிகழும் என்று நான் கூற மாட்டேன், முதலாளித்துவத்தின் மாளிகைகள் நாளையே தகர்ந்து போய் அது தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் என்று நான் சொல்ல மாட்டேன். மறு இணைப்புக்கான துவக்கம், மறுபரிசீலனைக்கான செயல்வழிகள், முதலாளித்துவத்தை தகர்க்க வேண்டிய அவசியத்தைப் பற்றிய புரிதல் ஆகியவை உருவாகியுள்ளது என்றுதான் கூறுகின்றேன். உலகில் இன்று பதினாறு நாடுகளில் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்கேற்போடு கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகெங்கும் அறிகுறிகள் தென்படுகின்றது நான் மேலும் பல உதாரணங்களைக் கூறப்போவதில்லை எனென்றால் தோழர் மான்சந்தா ஏற்கனவே தனது கடிகாரத்தை பார்க்கத் தொடங்கியுள்ளார். அறிக்கை பல்வேறு உண்மைகளையும் விபரங்களையும் அளித்துள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் வழி நடத்தப்படும் முதலாளித்துவவாதிகள், ஏகபோகவாதிகள், அதிகார வர்க்கத்தினர் வரலாற்றின் ஒரு அத்தியாயத்தை, வரலாற்றின் ஒரு பாடத்தை மறந்து போய்விட்டனர், வரலாற்றின் ஒரு உன்னதமான பாடத்தை மறந்து போகின்றார்கள். வரலாற்றை இறுதியாக தீர்மானிப்பது மனிதன்தான். மனித குலம் செல்ல வேண்டிய பாதை, மனித குலம் கையிலெடுக்க வேண்டிய பணி – இவையெல்லாம் தீர்மானிப்பது மனிதன்தான். இதை அவர்கள் மறந்து விட்டார்கள். இன்று மனிதன் விழித்துக் கொள்ளத் தொடங்கி விட்டான். ஏராளமான அறிகுறிகள் பல விதங்களில் தென்படுகிறது. நம் பார்வையும் செவிகளும் சரியாக இருந்தால் நம்மால் இதனை உணர்ந்து கொள்ள முடியும். நான் விரும்புவது இதைத்தான்.
அவர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள்? நம் நம்பிக்கையை, உறுதியை, எதிர்காலத்தை கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள். எதிர்காலத்தை பார்க்காதே என்று சொல்லுகிறார்கள். உங்கள் எதிர்காலமே முடிந்து விட்டது என்று கதைக்கிறார்கள். சோவியத் யூனியனின் சிதைவோடு நம் எதிர்காலமே முடிந்து விட்டது என்று பேசுகிறார்கள். மனித குலத்தை கொள்ளையடிக்க விழைகிறார்கள். சுரண்டலுக்குள்ளான, தரக்குறைவாக நடத்தப்படுகின்ற, துன்புறுத்தப்படுகின்ற, அவமானங்களுக்கு உட்படுத்தப்படுகின்ற, துயருற்ற கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை கொள்ளையடிக்க விரும்புகின்றனர். எதையும் எதிர் நோக்காதே, எதிர்காலம் மீது நம்பிக்கை கொள்ளாதே, இதுதான் உனது விதி, வாழ்க்கையின் யதார்த்தம் என்று ஏற்றுக் கொள் என உபதேசிக்கிறார்கள்.
நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று எனக்குச் சொல்லுங்கள். இது உண்மையா? இது சரியா? மனித குலம் இன்று மீண்டும் ஒன்றுபட்டு வருகிறது. எழுகிறது. சாமானிய மனிதர்கள், அவர்கள் சுரங்கங்களில் அவதிப்படும் உழைப்பாளி, வயல்வெளிகளில் பாடுபடும் விவசாயி, தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தும் தொழிலாளி, நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், எங்கெங்கும் காணப்படும் உழைப்பாளிகள், வேலையின்மையால் தவிப்பவர்கள், வறுமைக்கும் துயரத்திற்கும் ஆட்பட்டவர்கள், இப்படி அனைவரிடத்திலும் ஒரு தீப்பொறி உள்ளது. ஒரு நாள் அந்த தீ கொழுந்து விட்டு எரியும்.
தாகூர் பற்றி நான் குறிப்பிட விரும்புகிறேன். அவர் தனது எண்பதாவது பிறந்த நாளின் போது விடுத்த செய்தியை சொல்ல விரும்புகிறேன். அதற்கடுத்த சில மாதங்களில் அவர் இறந்து விட்டார். “ மனிதனின் மீது நம்பிக்கை இழப்பது மிகப்பெரிய பாவம் “ என்கிறார் அவர். எவ்வளவு மகத்தான செய்தி இது! தாகூரால் மட்டுமே இப்படி சொல்ல முடியும். “முறையற்ற வழிகள் மூலம் நீங்கள் செய்கிற செயல்கள் உங்களுக்கு தற்காலிகமாக பயனளிக்கலாம். ஆனால் நீங்கள் தரைமட்டத்திற்குச் சென்று விடுவீர்கள்” என உபனிஷத்திலிருந்து அவர் மேற்கோள் காண்பிக்கிறார். அவர் யாருக்கு ஆதரவாக உள்ளார்? யாரை தட்டி எழுப்புகிறார்?
சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்ட, கொடுமைக்குள்ளான மக்களின் குருதியால் ஆதிக்கவாதிகளால், வெற்றி பெற்றவர்களால் சேறாக்கப்பட்ட வரலாற்றின் சாலைக்கு, வரலாற்றுச் சக்கரத்தை எடுத்து வந்த சாமானிய அடிமை மனிதனுக்கு அவர் வேகம் அளிக்கிறார். வரலாற்றுச்சக்கரம் முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவர் பேசுகிறார். நாகரீக உலகின் அனைத்து வளங்களையும் உருவாக்கியது மனிதன். உலகெங்கும் நாம் பார்க்கிற அனைத்து அற்புதங்களும் பிரம்மாண்டங்களும் மனிதனின் அபாரமான படைப்புக்கள். அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றங்களுக்கு பின்னணியில் இருப்பது மனிதன்தான். தாகூர் இதை நன்கறிந்தவர். அதனால்தான் அவர் சாமானிய மனிதனுக்கு எழுச்சியூட்டுகிறார். ஏனென்றால் நாளைய உலகை வெல்லப்போவது அவன்தான். இதுதான் இன்றைய நிலையும் கூட. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் நம் நம்பிக்கையை கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள், நம் எதிர்காலத்தை பறிக்க விழைகிறார்கள். நம்முடைய உறுதியை சிதைக்க எண்ணுகிறார்கள். நம்முடைய வளங்களை சூறையாட நம்மிடமிருந்து அனைதையும் பறிக்கப்பார்க்கிறார்கள். எனவே தோழர்களே, மாநாட்டிலிருந்து நாம் செல்கையில் நம்முடைய உறுதியை தக்க வைக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தின் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நமக்கு எதிரான நடவடிக்கைகள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன. எனவே அனைத்து தோழர்களையும் அதிலும் குறிப்பாக இளைய தோழர்களை, உலகம் எத்திசை வழியில் செல்கிறது என்பதை அறிந்து கொள்ள மேலும் மேலும் படியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்று ஊதிய உயர்வுகளுக்குப் பிறகு ஒரு எல்.ஐ.சி ஊழியர் மாலை வீட்டிற்குச் சென்று ஒரு கோப்பை தேநீர் அருந்திய பிறகு உடனடியாக தொலைக்காட்சி முன்பாக அமர்ந்து விடுகிறார். “ஹம் ஆப்கே ஹைன் கோன்”, “ குச் குச் ஹோடா ஹை “ என தொடர்ச்சியாய் நிகழ்ச்சிகள். இவையெல்லாம் உங்களுக்கு நீண்ட காலம் பயனளிக்காது. பெரும்பாலனவை குப்பைகளாக, ஆபாசமானவையாக உள்ளவை. வன்முறையை, சோர்வினை, சுணக்கத்தை தூண்டக்கூடியவை. அதிகம் படியுங்கள். மனித குல வரலாறு எப்படி முன்னேறுகிறது என்பதை படியுங்கள். தயவு செய்து மேலும் மேலும் படியுங்கள்.
வியட்னாமின் வரலாற்று நாயகரை நான் நினைவு கொள்கிறேன். யார் அவர்?
(அரங்கிலிருந்து ஹோசிமீன் “ என்று குரல்கள்), ஆம் ஹோசிமீன், அவரது பெயர் இன்னும் நினைவில் உள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வியட்னாமின் விவசாயிகள் தங்களின் மிக்ச்சாதாரண ஆயுதங்களோடு மிக உயர்தர, நவீன ஆயுதங்களை உடைய அமெரிக்கர்களோடு வாழ்வா- சாவா என்று யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள். தோழர் ஹோசிமீன் எப்போதெல்லாம் போர் முனைக்கு தனது வீரர்களை சந்திக்க செல்கின்றாரோ, அப்போதெல்லாம் அவர் அவர்கள் மத்தியில் உரையாடுவார். அப்படிப்பட்ட சில உரைகளைப் படித்து நான் ஆச்சரியப்பட்டுள்ளேன்.
அதிகமான படைகளையும் அதி நவீன ஆயுதங்களும் கொண்ட அமெரிக்கப் படையோடு அற்பமான ஆயுதங்களைக் கொண்டு போரிடும் வீரர்கள் மத்தியில் அவர் பேசுவார்.” தோழர்களே நாம் மிகவும் நன்றாக போரிடுகின்றோம். இந்த நாடு உங்கள் அனைவரையும் மிகவும் பாராட்டுகின்றது, போற்றுகிறது. ஏனென்றால் நீங்கள் உங்கள் உயிர்களை தியாகம் செய்கின்றீர்கள். இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக, ஜனநாயகத்திற்காக நீங்கள் உங்கள் உயிரையே பலி கொடுக்க துணிந்துள்ளீர்கள். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் படியுங்கள். கடவுளுக்கு அடுத்தபடியாக உங்களிடம் உள்ள மிக முக்கியமான ஆயுதம் புத்தகம்தான்” என்பார்.
தோழர்களே புரிந்து கொள்ளுங்கள். அந்த மகத்தான புரட்சியாளர், தீர்க்கதரிசி, ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் ஏன் அவ்வாறு கூறினார்? நம்முடைய மனதை, சிந்தனைகளை விரிவு படுத்தவில்லையென்றால், உறுதியை தக்கவைக்கவில்லையென்றால், நமது நம்பிக்கையை தக்கவைக்கவில்லையென்றால் அங்கே நம் எதிரி எளிதில் உள்ளே புகுந்து விடுவான் என்று அவர் கூறுவார்.
இன்சூரன்ஸ்துறையில் நாம் துவக்கத்திலிருந்தே இருக்கிறோம். பிறகு ஆல் இந்தியா லைப்பும் ஐ.என்.டி.யு.சி யும் வந்தார்கள். பிறகு இந்த ஃபெடரேஷன் வந்தது. அதன் பின்பு பி.எம்.எஸ் வந்தது. எல்லோருமே நம்பகத்தன்மை அற்றவர்கள். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை சீர் குலைக்கும் எண்ணத்தோடு மட்டும் தோன்றியதால் அவர்களின் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதிலே இன்று எனக்கு மகிழ்ச்சிதான்.
நாம் ஏன் வளர்ந்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால் ஊழியர்களுக்கு பணியாற்றுவது, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பது என்ற கொள்கை வழியில் நாம் நிற்கிறோம். நாம் வாழ, பணியாற்ற, வளர விரும்புகின்றோம். நாம் வாழ்கிறோம், பணியாற்றுகின்றோம், வளர்கின்றோம். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். யார் வளர்கிறார்கள்? மேலும் வளர வேண்டும் என்ற உறுதியான எண்ணம் கொண்டவர்கள் வளர்கின்றனர்.
வருகின்ற நாட்களில் பதினேழாவது மாநாடு ஒரு மைல்கல்லாக மதிக்கப் படும் என்று நம்புகிறேன். ஏப்ரல் 1988 ல் பிறந்த நாள் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட பால் ராப்ஸன் அவர்களின் கவிதையை நினைவு கொள்ளுங்கள். “ நாம் அணிவகுத்துச் செல்கையில் பாடும் பாடல் கொதிகலன் போல எளிமையாக, நம் பள்ளத்தாக்குகள் போல ஆழமாக, நம் மலைகள் போல உயரமாக, அவற்றையெல்லாம் படைத்த மனிதர்கள் போல உறுதியாக இருக்கும்” ஒரு புரட்சிக் கவிஞனின் நம்பிக்கை ததும்பும் வார்த்தைகளைப் பாருங்கள். ஆகவே தோழர்களே, எனது உரையை இன்னும் நீளமாக்கி, மாநாட்டின் நேரத்தை மேலும் அதிகமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. நமது பணி நன்றாகவே உள்ளது என்று சொல்ல நான் விரும்புகிறேன். கடந்த மாநாட்டிற்குப் பின்பு நாம் வளர்ந்துள்ளோம். நமது உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்து அம்சங்களிலும் நாம் முன்னேறியுள்ளோம். ஆனால் நாம் ஓய்வெடுக்க நாம் விரும்பவில்லை. மேலும் அதிகமாக செயல்பட விரும்புகிறோம். ஃபுகியாமாவும் இதரர்களும் பரப்புகின்ற, சோர்வையும் சுணக்கத்தையும் உண்டாக்கும் தத்துவங்களுக்கும் சி.என்.என் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் பரப்பும் அபத்தக் குப்பைகளுக்கு பலியாக விரும்பவில்லை. வெறும் அபத்தமும் வன்முறையுமாகவே உள்ளது.
ஹாலிவுட் ஒரு காலத்தில் அற்புதமான திரைப்படங்களை தயாரித்தது. ‘டேல் ஆப் டூ சிட்டிஸ், டேவிட் காப்பர்பீல்ட் ‘ இன்னும் எத்தனை? தோழர் சுந்தரத்தால் மேலும் அதிகமான பெயர்களைக் கூற முடியும் ஏனென்றால் அவர் பல திரைப்படங்களை பார்த்திருக்கிறார். நான் அந்த அளவு பார்த்ததில்லை. ஆனால் இன்றோ அங்கிருந்து வெளியாவது எல்லாம் வெறும் பாலியல் உணர்வை தூண்டும் அசிங்கங்கள்தான். கொஞ்ச நேரத்திலேயே நாம் களைப்பாகி விடுகிறோம். இவற்றையெல்லாம் ஐந்தாறு நிமிடங்களுக்கு மேல் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பெரும்பாலானவர்களும் அப்படித்தான் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
இவற்றின் மூலம் நான் என்ன அடைகிறோம்? எதுவும் கிடையாது. வெறும் குப்பை, பாலியல் மற்றும் வன்முறைகளே. மனிதன் பாலியல் உணர்வை மட்டும் கொண்டவனா என்ன? மனித வாழ்வு மிகவும் உன்னதமானது. ஆணும் பெண்ணும் மிகவும் உன்னதமானவர்கள். வாழ்வில் சாதிக்க வேண்டியுள்ளது. நிறைவேற்ற வேண்டியவை உள்ளது, நினைத்து மகிழ வேண்டியவை. சிலவற்றை பின்பற்ற வேண்டியுள்ளது.
எனவே தோழர்களே, நம்மைச்சுற்றி விரிக்கப்படும் வலைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நம் பாதையை திசை மாற்ற, நம் உறுதியை சிதைத்திட, நம் வேகத்தை சீர்குலைக்க உருவாக்கப்பட்டுள்ள பொறிகளில் சிக்காதீர்கள். இந்த வார்த்தைகளோடு நான் உரையின் நிறைவுக்கு வருகிறேன். உங்கள் அத்துனை பேருக்கும் எனது நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள். இரண்டாயிரமாவது ஆண்டில் பொன் விழா மாநாடு நடைபெறுகையில் மேலும் அதிகமான தோழர்கள் வருவார்கள், அதிகமான இளைஞர்கள் பங்கேற்பார்கள். நரைத்த முடியுடையோர் கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாகி மறைவார்கள். இத்துடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.
No comments:
Post a Comment