Saturday, December 31, 2011

AIIEA CIRCULAR IN TAMIL

காப்பீட்டுக்  கழக  ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம், பதிவு எண் 640 / என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 64 / 11                                     29.12.2011
அனைத்து உறுப்பினர்களுக்கும்,
அன்பார்ந்த தோழரே,
புத்தாண்டு 2012
புத்தாண்டு 2012 குறித்து  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை கீழே  தந்துள்ளோம். வரும் ஆண்டு உழைக்கும் மக்களின் ஆண்டாகத் திகழ நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்வோம்.
புத்தாண்டு  வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள

ஒம் . .. எஸ்.ராமன்  
பொதுச்செயலாளர்
2011 ம் ஆண்டு வரலாற்றுக்குள் ஐக்கியமாக, புத்தாண்டு உதயமாகிறது. உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களுக்கு அவர்தம் வாழ்விலும் வாழ்க்கைத் தரத்திலும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்போம். இந்த நம்பிக்கையோடு இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் உலகம் எங்கும் உள்ள உழைப்பாளி மக்களுக்கும் இப்புத்தாண்டு மகிழ்ச்சி நிறைந்ததாய், பயனுள்ளதாய் அமைய வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

புத்தாண்டை நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் நோக்குகையில் மனித குலம் ஒரு நல்ல வாழ்க்கையை அடைய வேண்டும் என்பதற்கான போராட்டத்தை வடிவமைத்த கடந்தாண்டு நிகழ்வுகள் பற்றி நினைவு படுத்திக்கொள்வது மிகவும் அவசியமாகும். கடந்து கொண்டிருக்கும் ஆண்டானது சமீப காலங்களிலேயே உலகத்து உழைக்கும் மக்களுக்கு மிகவும் கடினமாக அமைந்த ஆண்டாகும்.

முதலாளித்துவம் 2007 ம் ஆண்டு சந்தித்த நெருக்கடி அமெரிக்காவிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும்  மேலும்  அதிகமானது. உலகின் மற்ற பகுதிகளும் கூட பாதிப்புக்களிலிருந்து தப்ப இயலவில்லை. 2008 ம் ஆண்டின் வங்கித்துறை நெருக்கடி, பல ஐரோப்பிய நாடுகளின் மிகப் பெரிய கடன் பிரச்சினையாய் உருவெடுத்தது. பல நாடுகளால் தங்களது கடன்களை திருப்பி செலுத்த இயலாமல் திவாலாகும் அபாய நிலையை சந்தித்தது. வரலாறு காணாத மிக அதிகமான வேலையின்மை விகிதத்துடன் அமெரிக்கப் பொருளாதாரம் பிரச்சினையில் உள்ளது. மாபெரும் மந்தம்

போன்ற மோசமான சூழலை நோக்கி முதலாளித்துவப் பொருளாதாரம் மூழ்கிப் போகும் நிலையில் உள்ளது என்ற பரவலான எதிர்ப்பார்ப்பு உள்ளது.

மக்களின் வாழ்வாதரங்கள் மீது இது நாள் வரை இல்லாத கடுமையான தாக்குதல்களை தொடுப்பதன் மூலம் முதலாளித்துவ நாடுகள் சிக்கல்களை தீர்க்கப்பார்க்கிறது. லட்சக்கணக்கான வேலைகள் வெட்டப்பட்டு விட்டன, சமூக நலப் பலன்கள்  முடக்கப்படுகின்றன. மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் கூட தாக்குதலுக்கு உள்ளாயின. உழைக்கும் மக்கள் இத்தாக்குதல்களுக்கு அடி பணிய, அவை அமுலாக அனுமதிக்கவில்லை, தயாராக இல்லை. தங்கள் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடுவதையும் இந்த ஆண்டு கண்ணுற்றது. பொருளாதார, சமூக சீர்கேடுகளுக்கு எதிராக மக்கள் வீரம் செறிந்த போராட்டங்கள் மேற்கொள்வதை அமெரிக்கா பார்த்தது, பார்த்துக் கொண்டிருக்கிறது.

“வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்” போராட்டம், 99 % மக்களை இனியும் தொடர்ந்து சுரண்ட அனுமதிக்க முடியாது என்ற செய்தியை தெளிவாகக் கூறியுள்ளது. இப்போராட்டம் பல்வேறு வளர்ந்த நாடுகளில் நூற்றுக் கணக்கான போராட்டங்கள் நடைபெற எழுச்சி அளித்துள்ளது. ஐரோப்பா ஒரு போர்க்களமாகவே மாறி விட்டது. சமீப காலத்தில் தொழிலாளர்களின் போராட்டங்கள் இங்கிலாந்து, பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சமத்துவமற்ற சுரண்டல் சமுதாய அமைப்பிற்கு சரியான சவாலாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை உழைக்கும் மக்களின் ஒற்றுமையும் போராட்டங்களும் ஏற்படுத்தி உள்ளது. ஏகாதிபத்திய சக்திகளால் ஆதரிக்கப்பட்ட அடக்குமுறை அரசுகளுக்கு எதிராக, ஜனநாயகம் கோரி மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாட்டு மக்கள் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்திய அரசியலும் பொருளாதாரமும் கூட இந்த ஆண்டு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தது. இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தோல்வியை அரசு நிர்வாகத்தின்  ஒவ்வொரு அம்சத்திலும்  உணர முடிந்தது. பணவீக்கம் மிகவும் பெருகியது. இதனை மட்டுப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும் அரசியல் உறுதி அரசுக்கு இல்லை. பொருளாதாரம் தடுமாறுகின்றது. தொழில்துறை உற்பத்தி எதிர்மறை வளர்ச்சி கண்டுள்ளது. கற்பனை கூட செய்ய முடியாத பிரச்சினைகளில் உழவர்கள் தவிக்க விவசாயத் துறையும் உண்மையிலேயே மிகப் பெரும் சிக்கலில் உள்ளது. வேலையின்மை விகிதம் அதிகரித்து சமூகப் பதட்டங்களை உருவாக்குகின்றது.


தேசம் மிகப்பிரம்மாண்டமான ஊழல்களால் திகைத்து நின்றது. அந்த ஊழல்கள் பல அமைச்சர்களையும் பல பெரும் முதலாளிகளையும் ஓய்வெடுக்க சிறைக்கு அனுப்பியது. முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் இப்போட்டியில் பின் தங்கவில்லை. கர்னாடக மாநில பாஜக அரசு ஊழல்கள் குறித்த அனைத்து சாதனைகளையும் முறியடித்து அம்மாநில முதல்வரையும் பதவியிலிருந்து விலக வைத்தது.

இந்த ஊழல்கள், ஆட்சியாளர்கள், உயர்மட்ட அதிகார வர்க்கத்தினர், மற்றும் முதலாளித்துவ பெரும் நிறுவனங்கள் ஆகியோரிடையே உள்ள மோசமான இணைப்புக்களை வெளிப்படுத்தியுள்ளது. ஊழல்கள் அதிகரிக்க ஊற்றுக் கண்ணாக உள்ளது நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள்தான் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிராக போர் நடத்துவதாக சொல்லிக் கொள்கின்ற இயக்கங்கள் நவீன தாராளமயத்தை அப்படியே அரவணைத்துக் கொண்டுள்ளது. எவ்வளவு கடுமையான சட்டத்தை இயற்றினாலும் கூட தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை ஒரு சேர எதிர்த்துப் போராடாமல் ஊழல்களை கட்டுப்படுத்த முடியாது. ஊழல் மற்றும் தாராளமயத்திற்கு எதிராக உழைக்கும் மக்களிடையே இது நாள்வரை இல்லாத மிகப் பெரிய ஒற்றுமை உருவானது என்பதையும் அதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு  கண்ணுற்றது.

இன்சூரன்ஸ் ஊழியர்களின் இயக்கமும் முக்கிய சாதனைகளை படைத்து புதிய சிகரங்களைத் தொட்டது. எல்.ஐ.சி யை தனியார்மயமாக்கும் பிர்ச்ச்சினையில் மத்தியரசு பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அன்னிய மூலதன உயர்விற்கு எதிராக நாம் நடத்திய இயக்கங்கள், நாடாளுமன்ற நிதியமைச்சக நிலைக்குழுவிடம் இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும் அரசின் பரிந்துரையை நிராகரிக்கக்கூடிய அளவில் சாதகமான விளைவுகளை உருவாக்கின. இந்த இரண்டு அம்சங்களிலும் ஆபத்து முழுமையாக மறைந்து விட்டது என்று நம்பி விட முடியாது. அரசு தற்காலிகமாக பின்வாங்கி உள்ளது. நாம் விழிப்புடன் இருந்து  நம் பிரச்சாரத்தை வேகப்படுத்த வேண்டும். நிலைக்குழு அளித்த பரிந்துரை மூலம் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்கலாம் என்ற ஆபத்து இப்போது உண்மையாகி விட்டது. இப்பிரச்சினையில் நமது போராட்டம் இன்னும் தீவிரமாக வேண்டும்.

2011 ம் ஆண்டு ஏராளமான நிகழ்ச்சிப் போக்குகளையும் சிக்கல்களையும் கொண்டிருந்தது.  2011 ம் ஆண்டு ஏற்படுத்திய காயங்கள், முதலாளித்துவ சுரண்டல்களுக்கு எதிரான வலிமையான, ஒற்றுமையான இயக்கங்களை உருவாக்கியது. இந்த ஒற்றுமையும் எதிர்ப்பியக்கங்களும் 2012 ல்

சுரண்டுகின்ற முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு கடுமையான சவாலாக திகழும்.

அப்படிப்பட்ட போராட்டங்கள் இந்தியாவிலும் நிகழும். புதிய பொருளாதார, நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவுகளால் பரவலான அதிருப்தி நிலவுகின்றது. இக்கொள்கைகளுக்கு எதிராக மக்கள் அணி திரள்கின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளோடு இணைந்துள்ள தொழிற்சங்கங்களெல்லாம் இணந்து, மக்களின் வாழ்வின் மீதும் வாழ்வாதாரங்கள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராகவும் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் 28.02.2012 அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள அறைகூவல் விடுத்துள்ளன. உலகமயமாக்கலுக்கு எதிரான உறுதியான தொடர் போராட்டங்கள் இந்தியாவில் நடைபெற இந்த வேலை நிறுத்தம் ஒரு நல்ல துவக்கமாக இருக்கும்.

2012 ம் ஆண்டு உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கான ஆண்டாக திகழும் என்பதற்கான ஏராளமான சமிஞ்சைகள் தென்படுகின்றது. 2012 ம் ஆண்டு உலகெங்கும் உழைக்கும் மக்கள் போராட்டங்கள் அதிகரிக்கப் போவதை காணப் போகின்றது.   முதலாளித்துவம் மீண்டும் தலை தூக்க நடக்கும் முயற்சிகளை தீவிரமாக தடுக்கும் ஆண்டாக அமையும். முதலாளித்துவத்திற்கான மாற்றை உழைக்கும் மக்களின் போராட்டங்கள் முன் நிறுத்துகின்ற ஆண்டாக அமையும். எனவே 2012 ம் ஆண்டை நம்பிக்கையோடும் மன உறுதியோடும் வரவேற்போம். .

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கும் இனிய, மகிழ்ச்சியான, அர்த்தபூர்வமான, புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றது.  


தோழமையுள்ள
ஒம் .. கே.வேணுகோபால்
பொதுச்செயலாளர்

No comments:

Blog Archive